புதிய அமைச்சரவை – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

0

புதிய அமைச்சரவையின் கட்டமைப்பில் 28 அமைச்சுகள், 40 இராஜாங்க அமைச்சுகள் மற்றும் அவர்களுக்கான விடயதானங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கண்டி புனித தலதா மாளிகையின் பூமியில் எதிர்வரும் புதன்கிழமை புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சகங்களை வழங்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கைகள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் தேசிய பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

28 அமைச்சுகளில், பாதுகாப்பு, நிதி, புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி, நீதித்துறை, வெளிவிவகாரம், பொது சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, கல்வி, சுகாதாரம், தொழில், சுற்றுச்சூழல் ,வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு, விவசாய வேளாண்மை, நீர்ப்பாசனம், காணி, மீன்வளம், பெருந்தோட்டம், நீர்வழங்கள், மின்சாரம் ஆற்றல், நெடுஞ்சாலை, போக்குவரத்து, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு, சுற்றுலா வர்த்தகம் தொழில் மற்றும் ஊடக அமைச்சுக்கள் உள்ளன.

இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் இம்மாதம் 20 ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.