புனரமைக்கப்பட்ட மிகப்பெரிய களஞ்சியசாலை மட்டக்களப்பில் திறந்துவைப்பு!

0

இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய களஞ்சியசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு – கள்ளியங்காடு களஞ்சியசாலை புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தக் களஞ்சியசாலை, ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ வேலைத் திட்டத்தின் புனரமைக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன், சிறப்பு அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது களஞ்சியசாலையினை அமைச்சர் திறந்துவைத்து பார்வையிட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நெல் கொள்வனவினையும் ஆரம்பித்துவைத்தார்.

அத்துடன், களஞ்சியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றிணையும் நட்டதுடன் களஞ்சியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் மிகக் குறைந்த விலையில் கொள்ளையடிக்கப்படும் நிலையை இல்லாமல்செய்ய அரசாங்கம் அனைத்து நெல்லையும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.