பொதுத்தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியானது

0

2020 பொதுத்தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் இன்று வௌியிடப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு யாழிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவரும் வேட்பாளருமான மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

12 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டுள்ளது.

 • வரலாற்றுப் பின்னணி
 • அரசியல் தீர்வு
 • அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடு
 • வடக்கு, கிழக்கு இராணுவமயமாக்கல்
 • கடந்த காலத்தைக் கையாளுதல்
 • நீதி மற்றும் பொறுப்புக்கூறல்

உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த தேர்தல் அறிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.

 • உண்மை
 • இழப்பீடுகள்
 • நினைவுகூரல்
 • கருத்துச் சுதந்திரமும் குழுமச் சுதந்திரமும்
 • பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அரசியல் கைதிகள்
 • சமூக-பொருளாதாரப் பாதுகாப்பு

ஆகிய விடயங்கள் தொடர்பிலும் தமது கொள்கைப் பிரகடனத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தௌிவுபடுத்தியுள்ளது.

அரசியல் தீர்வு விடயத்தில் , “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம், சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் வேண்டும்” என 2002 ஆம் காணப்பட்ட இணக்கப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனித்துவமான மக்களாகவும் தேசிய இனமாகவும் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் தொடர்பிலும் தமிழருக்குரிய ஒருமித்த உரிமைகள் தொடர்பிலும் திடசங்கற்பம் கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவிதி அல்லது எதிர்காலத்தை தீர்மானிப்பதற்குரிய உரிமை தொடர்பிலும் அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டதும், பிளவுபடாததுமான இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு-கிழக்கில் தக்க தன்னாட்சி முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் உறுதியாக உள்ளதாக கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் ஓர் அரசியலமைப்புக் கட்டமைப்பின்றி பல்லின சமூகமொன்றில் ஜனநாயகம் செயற்பட முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை ஆளுகின்ற உரிமை கொழும்பிலிருக்கும் அரசாங்கத்திடமல்ல எனவும் அது தமிழ் மக்களிடமே பொதிந்து இருப்பதாகவும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு தொடர்பில் “மக்களால் மக்களும் -மக்களின் அரசாங்கமும் – மக்களுக்கான அரசாங்கமும்” என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பினூடாகவே இலங்கைத் தமிழர்கள் மற்றும் தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் வசிக்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும் என இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட வடக்கு – கிழக்கு அலகைக்கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த செயற்பாடு வடக்கு-கிழக்கில் வாழும் எந்த ஒரு மக்கள் மீதும் எவ்வித முரண்பட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தா வண்ணம் இருத்தல் அவசியம் எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இவை அனைத்தும், ஒன்றுபட்டதும் பிளவுறாததுமான இலங்கைக்குள் வன்முறையற்ற சமாதான வழிமுறைகளில் அமைந்த பேச்சுவார்த்தையூடாக நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு இராணுவமயமாக்கப்படல் தொடர்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தில் இராணுவத்தின் பங்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒன்று எனவும், அது பொதுமக்களின் அதிகாரம் மற்றும் மேற்பார்வைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக நம்புவதாகவும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு கூறியுள்ளது.

காணாமற்போனவர்களின் அலுவலகம் மற்றும் இழப்பீடு வழங்கும் அலுவலகம் ஆகியவை சட்டப்படி உருவாக்கப்பட்டிருந்தாலும், காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலுக்கான கொள்கை பிரகடனத்தில் எடுத்துக்கூறியுள்ளது.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஆதரிக்கும் என அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமை மதிக்கப்பட வேண்டும் எனவும் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து நடைபெற்று வருவதைப் போலவே நினைவுகூரலில் ஈடுபடும்போது மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகக்கூடாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

சிவில் சமூக அமைப்புகள், செயலார்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கும், சிவில் சுதந்திரம் முடக்கப்படுவதற்கான முயற்சிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக இருக்கும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கும் அழுத்தம் கொடுப்பதோடு, இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய கடுமையாக தொடர்ந்து செயற்படுவதாகவும் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் பொருளாதாரத் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், வட, கிழக்கில் வெளிநாட்டு முதலீடுகள் நேரடியாக இடம்பெறுவதை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடல் மார்க்கமாக இந்தியாவிற்கான போக்குவரத்து வசதிகள் செய்யப்படுதல் வேண்டும் எனவும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு சாதகமான வட்டி வீதத்துடன் கடன் வழங்குதல், உதவித்தொகை வழங்குதல் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவக்கட்டுப்பாட்டின் கீழுள்ள தனியார் நிலம் விடுவிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு காலத்திற்குரிய இழப்பீடு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவான கல்முனைக்கான தனித் தமிழ் பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தி முன்வைப்பதாவும் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் பல்லின மக்களிடையே நிரந்தரமானதும் நிலையானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் அனைவரும் சமத்துவமுள்ள குடிமக்களாக வாழ வழிசெய்ய சர்வதேசத்தின் வகிப்பாகம் முன்னை விட தற்போது அத்தியாவசியமானது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.