பேருந்துகளில் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை

0

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சில நடமாடும் வியாபாரிகளால் சுகாதார முறைகளை பின்பற்றாது விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பயணிகளிடமிருந்து போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ரயில்வே திணைக்களத்தினாலவ் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரயிலில், நடமாடும் வியாபாரிகள் நுழைவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சில நடமாடு வியாபாரிகளால் தனியார், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் உணவு பொருட்கள், குடிநீர் போத்தல்கள் மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, அவர்களால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய வியாபார நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகையால், உடனடியாக இந்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.