பொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது

0

பொதுத் தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் இந்தக் காலப்பகுதியில், பொதுத் தேர்தல் ஒன்றை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து நாம் கடந்த மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறோம்.

சமூக இடைவெளி, முகக்கவச பாவனை, கையுறை பாவனை என்ற இந்த மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். இதுதொடர்பான விசேட திட்டமொன்றையும் நாம் தயாரித்து வருகிறோம்.

இந்தக் காரணங்கள் தவிர்ந்து, பொதுத் தேர்தலை பிற்போட வேண்டும் என்ற எண்ணம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆணைக்குழுவில் பிளவுகள், முரண்பாடுகளும் இல்லை என்பதை இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மக்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில்தான் நாம் தீவிரம் காட்டுகிறோம். அத்தோடு, ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவில், அரசியல் லாபம் தேடப்பட்டதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

எனவே, ஜுன் மாதம் வழங்கப்படவுள்ள 5 ரூபாய் நிதியில் இந்தப் பிரச்சினை இருக்கக்கூடாது என்று தான் நாம் வலியுறுத்தியிருந்தோம். எனினும், நாம் இந்தக் கொடுப்பனவை வழங்க வேண்டாம் என கூறவில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.