பொதுத்தேர்தல் குறித்து உயர் நீதிமன்றின் ஆலோசனையை பெறுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!

0

பொதுத்தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தவிற்கு கடந்த 1ஆம் திகதி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட்-19 தொற்று பரவல் பற்றி ஆராய்ந்த போதும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் விசேட நிபுணர்களின் நிலைப்பாட்டுக்கு அமையவும் ஏப்ரல் மாதத்திற்குள் வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை மே மாத இறுதிப்பகுதியில் நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்பதோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினமான மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து மூன்று மாத்திற்குள் தேர்தலை நடத்த முடியாது என்று இம் மாதம் முதலாம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் சிக்கலுக்கு தீர்வினைக் காணும் முகமாக உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொள்கிறது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.