பொதுத் தேர்தல் திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
இந்த தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு உயர் நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளது.
தேர்தல் தினத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான சமர்ப்பணம் அனைத்தும் நிறைவடைந்தன.
இந்தநிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை தொடர்வதா இல்லையா என்பது குறித்து இன்றைய தினம் உயர்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
இந்த மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்த உத்தேசித்து, தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது.
இதனையடுத்து கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் தாக்கம் செலுத்துவதால் குறித்த தினத்தில் தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்து, அந்த வர்த்தமானியை இரத்து செய்யக்கோரி, அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான சமர்ப்பணங்கள் கடந்த 10 நாட்களாக உயர் நீதிமன்றின் 5 நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் முன்வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.