பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை இவ்வாரத்திற்குள் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் திகதி தொடர்பில் அநேகமாக நாம் தீர்மானித்துவிட்டோம். எனினும் எம்மிடம் கலந்துரையாடல்களை கோரியுள்ள அரசியல் கட்சிகளிடம் இந்த வாரத்தினுள் கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ஜூன் 20 தேர்தல் திகதி இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் விருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி வௌியிடுவதில் சிக்கல் இல்லை. நாம் அடுத்த வர்த்தமானியில் ஜூன் 20 தேர்தல் திகதியை நீடித்து வௌியிடுவோம். எனினும் அது ஜூன் 21 ஆக இருக்காது.
மேலும், வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் விருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.