பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய

0

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரான மஹிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பாக பிழையான செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்த செயற்பாடுகளை கைவிட வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறான செய்திகளினால், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுற்கான மரியாதை இல்லாது போகும் என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேர்தலுக்கான திகதியை நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. உயர்நீதிமன்றுக்கு எம்மால் அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க, இதனை தீர்க்கும் அதிகாரமும் எம்முடையதாகும்.

தற்போது நாம் சுகாதார ஆலோசனைக்கு இணங்க, தேர்தலை எவ்வாறு பாதுகாப்பான முறையில் நடத்துவது என்பது குறித்து கலந்துரையாடி வருகிறோம்.

விசேடமாக பிரசார நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிக எண்ணிக்கை நபர்கள் ஒன்றிணைந்து பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதுதான், இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கான அச்சுறுத்தலாகக் கணப்படுகிறது.

இதனால், இதனைக் கட்டுப்படுத்தும்வகையிலான விசேட சுற்றுநிருபமொன்றை தயாரித்து வெளியிடுமாறு, சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.