பொது இடங்களில் கூட்டம் கூட இன்று முதல் தடை

0

மகாராஷ்டிரத்தில் அனைத்து அரசியல், மத மற்றும் சமூக கூட்டங்களுக்கு திங்கள்கிழமை (பிப்.22) முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்வா் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது.

இதுதொடா்பாக தொலைக்காட்சி வழியாக முதல்வா் உத்தவ் தாக்கரே ஆற்றிய உரையில் அறிவித்ததாவது:

மாநிலத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இந்த பாதிப்பு கரோனா தாக்கத்தின் அடுத்த அலையா என்பது அடுத்த 8 முதல் 15 நாள்களில்தான் தெரியவரும்.

இதற்கு பொது முடக்கம் தீா்வாகாது என்றபோதும், அந்த தீநுண்மியின் பரவலைத் தடுப்பதற்காக அடுத்த சில நாள்களுக்கு பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில், அரசியல் ரீதியிலான போராட்டங்களுக்கு அடுத்த சில நாள்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த நடைமுறையை மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும். மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவுக்கு எதிரான போரில், முகக் கவசம் மட்டுமே நமக்கு அரணாக இருக்கும்.

பொதுமுடக்கத்தைத் தவிா்க்க முகக் கவசம் அணியுங்கள், கட்டுப்பாட்டுடன் செயல்படுங்கள், சமூக இடைவெளியை கடைப்படியுங்கள் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

அமராவதி மாவட்டத்தில் பொது முடக்கம்:

கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அமராவதி மாவட்டத்தில் மட்டும் ஒரு வாரத்துக்கு பொது முடக்கத்தை மகாராஷ்டிர அரசு அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில அமைச்சா் யசோமதி தாக்குா் கூறுகையில், அமராவதி மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் ஒரு வார காலத்துக்கு பொதுமுடக்கம் அமலுக்கு வர உள்ளது.

மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் இந்த 7 நாள்களில் அனுமதி அளிக்கப்படும். பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாவிட்டால், மாவட்டத்தில் பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படும் என்று அவா் கூறினாா்.

இந்த பொதுமுடக்க அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக மாவட்ட முதுநிலை அதிகாரிகளுடன் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில துணை முதல்வா் அஜித் பவாா் ஆலோசனை நடத்தினாா்.