போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

0

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் இன்று(வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொதுப்போக்குவரத்து சேவைகளை வழக்கம் போல ஆரம்பித்தால் கடைப்பிடிப்ப வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், சில பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்படி,

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவு வழங்கிய வழிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்துதல்,ஒவ்வொரு நிலையத்திலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை அளவிடவும், எந்தவொரு நபருக்கும் காய்ச்சல், இருமல் இருந்தால், உடனடியாக சுகாதாரத் துறையின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குதல்.

ரயில்வே கட்டளைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துதல். அதன்படி, ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ துப்புவது, ரயில் நிலையத்திலோ அல்லது முற்றத்திலோ வர்த்தகம் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்படும்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவின் அறிவுறுத்தலின் படி, கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மீது ஒரு மீற்றர் இடைவெளி போன்ற சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்தல்.

ஒவ்வொரு ரயில் நிலையம், மற்றும் பேருந்து ஆகியவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கிருமி நீக்கம் செய்வது.

அத்தியாவசிய தேவைகள் இல்லாதவர்கள் ரயில்களிலோ பேருந்துகளிலோ அனுமதிக்கப்படுவதில்லை ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பாக ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்து, ஒழுங்கு முறையொன்று தயாரிக்கப்படவுள்ளது.

குறித்த கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ரயில்வே துறை, இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் மோட்டார் வாகன பதிவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.