கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாக தெரிவித்து இணையத்தளங்களில் வெளியாகும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புக்கள் தொடர்பான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் சத்துர குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்படாத மருத்துவ குறிப்புக்களை இணையத்தளத்தினூடாக சிலர் பரப்பிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலி மருத்துவ குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாமனெ அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது பரவும் Covid19 எனப்படும் கொரேனா வைரஸுக்கான சிகிச்சை வழங்க ஆயுர்வேத வைத்தியர்கள் என்ற போர்வையில் பலர் சமூகவலைத்தளங்களினூடாக ஆயுர்வேத பொருட்களை அறிமுகப்படுத்துவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
இவ்வாறு உத்தியோகப்பற்றற்ற முறையில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும் மருந்துப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாமென அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அதேபோல சுகாதார தரப்பினால் வழங்கப்படும் உரிய வழிமுறைகளை மாத்திரம் பின்பற்றுமாரு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.