மக்களின் பாதுகாப்பை முதன்மையானதாகக் கருதி முடிவெடுங்கள்- எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை

0

“பொது மக்கள் பயமின்றி வாக்களிக்க வேண்டுமென்ற காரணத்திற்காக தேர்தலைப் பிற்போடுமாறு கேட்டிருக்கின்றோம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிற்கான வேட்புமனுவை யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) சமர்ப்பித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகிறது. 5 தேர்தல் மாவட்டங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றோம்.

நாளை வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் தேர்தல் ஆணைக்குழு சில தீர்மானங்களை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏற்கனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

நாட்டில் கோவிட்-19 என்கின்ற வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையானதாகக் கருதி தேர்தலைப் பிற்போட வேண்டும் எனக் கேட்டிருக்கின்றோம். பொதுமக்களின் பாதுகாப்புத்தான் எமது அதி உச்ச கரிசனையாக இருக்கின்றது.

அத்துடன், சுயாதீனமாக தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், ஜனநாயகப் பண்புகள் பலவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். சுயாதீனமாக தேர்தல் பிரசார நடைமுறைகள் நடைபெற வேண்டும். மக்கள் பரப்புரைக் கூட்டங்களுக்குச் சென்றுவரக் கூடிய சூழ்நிலைகள் இருக்க வேண்டும்.

தேர்தல் அன்று பொதுமக்கள் பயமின்றி வாக்களிப்பதற்கான சூழ்நிலை இருக்க வேண்டும். அப்படி இருந்தால், தான், அது சரியான முறையான ஒரு தேர்தலாக இருக்கும்.

ஆகையினால், நாங்களும், ஆட்சியில் இருக்கின்றவர்களைத் தவிர மற்றைய கட்சிகள் பலவும் தேர்தலைப் பிற்போடுமாறு கேட்டிருக்கின்றார்கள். வேட்புமனுத் தாக்கலிற்கான காலம் நீடிக்கப்படாத காரணத்தினால், நாங்கள் இன்றைய தினம் அமைதியாக, எவருக்கும் இடைஞ்சல் இல்லாமல், சன நெருக்கடி அற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கின்றோம்.

இதைத் தொடர்ந்து, எமது பரப்புரைகளை நிறுத்தி வைப்போம். பொது மக்கள் கூடும் சூழ்நிலைகளைத் தவிர்ப்போம். பொறுப்புடன் செயற்படுகின்றோம். ஏனையவர்களையும் பொறுப்போடு செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சூழ்நிலை சரியான ஒரு நிலமைக்குத் திரும்புகின்ற போது, இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என நினைக்கின்றோம்” என்றார்.