மக்களை அவதிப்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள்

0

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள நுண் நிதிநிறுவன ஊழியர்கள் கடன் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதால் கிராமப்புற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தின் பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் அன்றாடம் தொழில்செய்து வாழ்வை நடத்திவரும் தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கடன் வசூலிக்கும் நிறுவனங்கள், வங்கிகள் தற்போது அதனை அறவிடாமல் கால அவகாசம் ஒன்றினை வழங்குமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 11ஆம் திகதிமுதல் நாட்டினை வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நுண்நிதி நிறுவன ஊழியர்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் கடன் வசூலிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனால், ஊரடங்கு காரணமாக தொழில் இன்றி இருந்த தாம் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, தம்மிடம் அறவிடப்படும் கடன் பணத்திற்கு கால அவகாசம் ஒன்றினை வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.