மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து கிழக்கு ஆளுநரின் கவனத்திற்கு சாணக்கியனும்,  ஜனாவும் கொண்டு சென்றனர்!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியனும்,  கோவிந்தன் கருணாகரனும் திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநரான அனுராதா யாஹம்பத்தினை இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) சந்தித்து பேசியிருந்தனர்.

இதன்போது பல விடயங்கள் கிழக்கு மாகாண மக்கள் நலன் சார்பாகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவற்றில் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரிய  வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும், தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதிலும் குறிப்பாக பல நாட்களாக இழுபறியில் உள்ள DCC மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தினை நடத்தி மக்களுக்கு உரிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டதற்கமைய, சட்டவிரோத மண் அகழ்வு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இவ்வளவு காலமும் அமைக்கப்படாமல் இழுபறியில் இருக்கும் விசேட குழு ஒன்றை உடனடியாக அமைத்து பிரச்சனைக்குரிய தீர்வு காணுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சில சட்ட விரோத செயல்பாடுகள் செயல்கள் என்பவற்றை தடுப்பதற்கான சில கலந்துரையாடல்களும் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.