மக்கள் எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல, அறிக்கை தொடர்பில் எமக்குள் முரண்பாடுகள் பல உள்ளன என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து, மக்கள் எதிர்பார்த்தது இவ்வாறான அறிக்கை இல்லை.
இந்த ஆணைக்குழு குறித்தோ, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தோ தான் எந்தவோர் அபிப்பிராயத்தையும் முன்வைக்கப் போவதில்லை. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில், எமது சட்டத்தரணிகள் குழுவுடன் இது குறித்து முழுமையாக ஆராயவுள்ளோம்.
மக்கள் எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல. அறிக்கை தொடர்பில் எமக்குள் முரண்பாடுகள் பலஉள்ளன. உலகில் எந்தவோர் இடத்திலும் தீவிரவாதக் குழுவைச் செயற்படுத்தும் தலைவர் ஒருவர், தற்கொலை செய்துகொள்ள மாட்டார். எனவே, இந்தத் தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான், ஏன் தற்கொலை குண்டுதாரியானார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சஹ்ரானை வழிநடத்தியவர் யார், என்ற சந்தேகம் எமக்கிருந்தாலும் அதற்கான பதில் இவ்வறிக்கையில் இல்லை. இந்தத் தாக்குதலுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் அல்லது வேறு குழுவினர் அல்லது இதில் சர்வதேசத்தின் தலையீடு உள்ளதா என்ற சந்தேகம், பொதுமக்களுக்கு இருந்தாலும் அது தொடர்பான எவ்வித தகவல்களும் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
அதுமட்டுமன்றி, இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில விடயங்களுடன் எம்மால் இணங்க முடியாதுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.