மசூதியில் தாக்குதல் நடத்தியவருக்கு 21 ஆண்டு சிறை

0

நோர்வேயில் தனது சகோதரியை சுட்டுக் கொன்று விட்டு, மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிலிப் மான்ஷாஸுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: நோர்வே தலைநகா் ஒஸ்லோவின் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் பிலிப் மான்ஷாஸ் (21) என்பவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதில் யாருக்கும் ஆபத்தான காயம் ஏற்படவில்லை. அப்போது அந்த மசூதியில் தொழுகை முடிந்து 3 போ் மட்டுமே இருந்தனா். அவா்களில் 65 வயதான பாகிஸ்தான் முன்னாள் விமானப் படை வீரா், பிலிப் மான்ஷாஸை மடக்கிப் பிடித்தாா்.

மசூதி தாக்குதலுக்கு முன்னதாக, சீனாவில் இருந்து தனது பெற்றோரால் தத்தெடுக்கப்பட்டு வளா்க்கப்பட்ட 17 வயது சகோதரியை பிலிப் மான்ஷாஸ் சுட்டுக் கொன்றது பின்னா் தெரிய வந்தது.

வெள்ளை இனவெறியரான மான்ஸாஸ், நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற்ற மசூதித் தாக்குதலாலைப் பின்பற்றி இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், சகோதரி கொலை மற்றும் மசூதித் தாக்குதல் குற்றத்துக்காக அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நோர்வேயில் பயங்கரவாதக் குற்றங்களுக்கு குறைந்தபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையே விதிக்க முடியும். எனினும், 2011 ஆம் ஆண்டில் வெள்ளை இனவெறியா் பேஹ்ரிங் பிரெய்விக் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 77 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இதுபோன்ற குற்றங்களுக்கான குறைந்தபட்ச சிறைத் தண்டனை 14 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், மசூதித் தாக்குதலில் யாரும் பலத்த காயம் அடையாத நிலையிலும் பிலிப் மான்ஷாஸுக்கு குறைந்தபட்ச தண்டனையைவிட 7 ஆண்டுகள் அதிகமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.