மட்டக்களப்பில் அரச அலுவலகங்களில் தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து அரச சேவைகள் வழமைக்குத் திரும்பியிருப்பதால் அரசாங்கத்தின் அறிவுறுத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அலுவலகங்களில் தொடர்ச்சியாக தொற்று நீக்கி விசறல் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இதற்கமைய மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகத்திலும் பிரதேச செயலகங்களிலும் மற்றுமுள்ள சகல அரச காரியாலயங்களிலும் தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் பொதுச் சேவைகளுக்காக சமூகமளிக்கும் பொது மக்களுடாக கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கப்படுவதுடன் அரச பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இத்தொற்று நீக்கல் நடவடிக்கைகயில் எக்சன் யுனிரி லங்கா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி பேனாட் பிரகாஸ் தலைமையிலான கே.சதீஸ்குமார், ஆர். சரத் சந்திரன் அடங்கலான குழுவினர் ஈடுபட்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு நகரிலுள்ள பொது இடங்கள், சனக்கூட்டம் அதிகமாகக் கூடும் வர்த்தக நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்றாமலிருக்க மட்டக்களப்பு மாநகரசபையினாலும் இத்தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.