மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்காகவும் அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்- சாணக்கியன்

0

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதீயுதீன் வீட்டில் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமிக்கு நீதிவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குறித்த சம்பவத்துக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தும் அரசியல் கட்சிகள், கடந்த காலங்களில் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் முன்வரவேண்டும்.

மேலும் சிறுமி ஹிஷாலினியின் மரணத்தை, சிலர் தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பில் அத்துமீறிய காணி அபகரிப்பினை பெரும்பான்மையினர் முன்னெடுக்கும்போது, அதனை தடுத்து நிறுத்தமுடியாத நிலையிலேயே இங்குள்ள அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.