மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கோவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் ஐந்து பேர் அதிதீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
வேகமாகப் பரவி வரும் கோவிட் நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உயர் அதிகாரிகளுக்கிடையிலான விசேட கூட்டம் வியாழக்கிழமை இடம்பெற்ற போது அதில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதனை பொது மக்களுக்கு அறிவிப்பது என பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வாழைச்சேனை பொலிஸார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தேவையற்ற விதத்தில் பொருள் கொள்வனவிற்காகக் கடைத் தெருக்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல்.
வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் உரிய முறைப்படி முகக்கவசம் அணிந்து கொண்டு செல்லல்.
அடிக்கடி முறையாக 30 செக்கன்கள் கைகளைக் கழுவிக் கொள்ளுதல் அல்லது தொற்று நீக்கி பாவித்தல்.
புனித நோன்பு பெருநாள் வருவதனால் பொருட்களுக்காக வெளியிடங்களுக்குச் செல்வதை முற்றாகத் தவிர்த்தல்.
வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்களது வசதிக்கேற்ப நுகர்வோரை உரிய கோவிட் -19 பாதுகாப்புடன் உள்ளெடுத்து தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
பள்ளிவாசல்களில் கோவிட் -19 வழி முறைகளைப் பேணி 25 பேர்கள் மாத்திரம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல் வேண்டும்.
பெண்கள் வணக்க வழிபாடுகள் பள்ளிவாசல்களுக்கு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதலால் தங்கள் வணக்க வழிபாடுகளை வீட்டிலிருந்து செய்து கொள்ளுங்கள்.
சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ், ஜூம்ஆ தொழுகை மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஹ்திகாப், தௌபா போன்ற அனைத்து கூட்டுச் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தல்
பள்ளிவாசல் வளாகத்தில் அல்லது தனியார் இடங்களில் நோன்புக் கஞ்சியை விநியோகிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
31.05.2021 வரை சகல தனியார் வகுப்புகள் மதரசாக்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
சகல பொது நிகழ்வுகள், இப்தார் நிகழ்வுகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேற்படி நடவடிக்கைகளை மீறுவோருக்கு எதிராக கோவிட் -19 சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறிவித்துக்கொள்கின்றோம் என்று அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக், வாழைச்சேனை பொலிஸார், பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.