மட்டக்களப்பில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு – 4 பிள்ளைகளின் தாயார் கைது

0

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் பெண் சிசுவொன்று நாய் இழுத்துச் சென்ற நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அந்த குழந்தையை பிரசவித்த 4 பிள்ளைகளின் தாய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளாரென வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய 21, 17, 14, 11 வயதுகளுடைய 4 பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண்ணின் கணவர் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் வேறொரு நபருடன் தகாத தொடர்பு வைத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் வீட்டின் வளவின் 300 மீற்றர் தூரம் கொண்ட பகுதியில் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிசுவை அவ்விடத்திலேயே கைவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் நேற்று காலை குழந்தையை கைவிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது குழந்தை காணாமல் போயிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நாய் ஒன்று இறந்த சிசு ஒன்றின் உடலை இழுத்துச் செல்வதை கண்ட நபரொருவர், கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குறித்த சிசுவின் தலை பகுதியை கொண்ட உடலை பொலிஸார் கண்டெடுத்ததுடன், குழந்தையை பிரசுவித்த பெண்னை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.