மட்டக்களப்பில் சிறுவர்கள் இருவர் கிணற்றில் வீசப்பட்டு கொலை – தந்தை கைது

0

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூக்கத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் அவர்களது தந்தையினால் கிணற்றில் வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் முறையே 10, 07 ஆகிய வயதுகளையுடைய  இரு குழந்தைகளின் சடலங்களையும் பொலிஸார் கிணற்றிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

அஷீமுல் ஹக் (வயது 10) என்ற சிறுவனும், ‪ அஷீமுல்  ஷாஹியா (வயது 07) என்ற சிறுமியுமே சடங்களாக கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக 40 வயதான முஹம்மது லெப்பை சுலைமாலெப்பை என்ற குறித்த சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவி கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் கோளாறு காரணமாக மரணித்ததைத் தொடர்ந்து சிறுவர்களை தந்தையே பராமரித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.