மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்ட 350 பேர் விடுவிப்பு!

0

கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிப்படுத்தப்பட்ட 350 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தினை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் கிடைக்கப்பெற்ற அனுபவத்தினைக்கொண்டு இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது மட்டக்களப்பு மாநகரசபைப் பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தவகையில் காணப்பட்டது. அதனைக் கட்டுப்படுத்தவும் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

பொதுச் சந்தைகளை மூடியுள்ளதன் காரணமாக வீதிகளில் பொருட்களை விற்பவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் விற்பனை செய்யாமல் நகரின் நான்கு பகுதிகளில் விற்பனை செய்வதற்கும் அங்கு வருவோர் ஒரு மீற்றர் தூரத்தில் சமூக இடைவெளியை ஏற்படுத்தி நின்று தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை, செங்கலடி, ஏறாவூர் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நடமாடும் பொருட்கள் விற்பனையை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு வேளையின்போது விவசாயிகள் தமது கடமைக்குச் செல்வது, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது அத்துடன் அத்தியாவசிய சேவையாளர்கள் தமக்கான கடமைக்குச் செல்வது குறித்து பாஸ் பெறும் நடைமுறைகள் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.

அந்தந்தப் பகுதி பிரதேச செயலாளர்களின் சிபாரிசுக்கு அமைவாக வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒன்றினை விநியோகம் செய்யவுள்ளனர். அதேபோன்று பொலிஸில் பாஸ் இனையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, பொதுமக்களிடம் பணிவான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். நாளை ஊரடங்கு தளர்த்தப்படும்போது தேவையின்றி மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் வெளியில் வந்து தமக்கான பொருட்களைக் கொள்வனவுசெய்ய முடியும்.

தயவுசெய்து பொதுமக்கள் தமக்கான பாதுகாப்பினையும் சமூகத்தின் பாதுகாப்பினையும் எமது மாவட்டத்தின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

சுகாதார திணைக்களத்தின் தகவலின் அடிப்படையில் தற்போது தனிப்படுத்தல் நடவடிக்கையில் 485 பேர் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். 350இற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிப்படுத்தலில் இருந்து விடுபட்டுள்ளனர். 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் சுகாதார திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற இந்த மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு வருகைதந்துள்ளனர். அவர்களை அந்தந்த பிரதேச செயலாளர்கள் இனங்கண்டு அவர்கள் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.