மட்டக்களப்பில் தமிழர் பகுதி ஆபத்தில்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்

0

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலையுருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றனர்.

இந் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள்,

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன் அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டு செல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடாமையினால் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்னையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.