மட்டக்களப்பில் தமிழ் இனப் பரம்பலைக் குறைக்கும் காரியங்கள் அரங்கேறுகின்றன- கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு

0

மட்டக்களப்பில் தமிழ் இனப் பரம்பலைக் குறைப்பதற்காக எல்லைப் புறங்களில் அரசாங்கம் சாதுரியமான காரியங்களை அரங்கேற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் மாகாண சபைக்கும் நாடாளுமன்றத்திற்கும் பிரதிநிதிகள் செல்லக்கூடிய அளவிற்கு இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து குடியேற்றங்கள் செய்யப்பட்டு பெரும்பான்மையினத்தின் இனப்பரம்பலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இறுதியாக 74 வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இனப் பரம்பலைக் குறைப்பதற்காக தற்போது சாதுரியமாக காரியங்கள் எல்லைப்புறங்களில் அரங்கேற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு, பொலன்னறுவை எல்லையிலிருந்து மயிலத்தமடு, மாதவனைப் பகுதி, கார்மலை, மேய்ச்சல்கல் பகுதி, வெட்டிப்போட்ட சேனை, கெவிலியாமடு பகுதி என அம்பாறை வரை தமிழ் மக்களின் மேய்ச்சற் தரைகளை அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து வந்த சிங்கள மக்களுக்கு சேனைப் பயிர்ச் செய்கைக்காகவும் மரமுந்திரிகைச் செய்கைக்காகவும் என இரண்டு அல்லது மூன்று ஏக்கர் என காணிகளைப் பகிர்ந்தளித்து எதிர்காலத்திலே குடியேற்றுவதற்கான திட்டங்கள் போடப்பட்டுவருவதாக கோவிந்தன் கருணாகரம் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் தமிழர்கள் மிகவும் பலமிழந்திருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச சபை தரமிறக்கலும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றோரும்  தமிழர்களுக்கு எதிராக நடக்கின்ற அநியாயங்களை அரசாங்கத்திடம் தட்டிக்கேட்க வேண்டும்” என அவர் வலியறுத்தியுள்ளார்.