மட்டக்களப்பில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை

0

மட்டக்களப்பில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அப்பகுதியில் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகளிலுள்ள தாழ்நிலங்கள், வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

பல பகுதிகளில், வீதிகள் நீரில் மூழ்கியதுடன் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் சென்றதன் காரணமாக மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் மா.தயாபரன் ஆகியோர் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் அங்குள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

கடந்த காலத்தில் நீர்வடிந்தோடும் பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

கட்டடங்கள் அமைக்கும்போது, மாநகரசபையின் அனுமதியை முறையாக பெற்று அமைக்கும்போது எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள நிலைமையினை குறைத்துக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.