மட்டக்களப்பில் தேவையற்ற பதற்றத்தினை ஏற்படுத்த முயற்சி – இரா.சாணக்கியன் சாடல்!

0

மட்டக்களப்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தினை ஏற்படுத்த பொலிஸார் முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேற்றுச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசத்தை அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் நேற்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் நேற்று முந்தினம் வேற்றுச்சேனை கிராமத்தில் உள்ள புளியடி வைரவர் ஆலயம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டுச் சென்றதையடுத்து பொதுமக்கள், கிராமவாசிகள் இதன்போது குழப்பமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அங்குவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து சாணக்கியனுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம், குறித்த இடத்திற்குச் சென்றிருந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வியாழேந்திரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் அருண்தம்பிமுத்து ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசமுற்பட்டபோது ஆர்ப்பாட்டர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் அவர்களை பொதுமக்கள் அங்கிருந்து செல்லுமாறு கோசங்களை எழுப்பினர்.

இந்தநிலையில் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதிக்குள் நுழைவதற்கு சாணக்கியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இன்று(திங்கட்கிழமை) சாணக்கியனின் அலுவலகத்திற்கு சென்ற பொலிஸார் இதுகுறித்த தடை உத்தரவினை கையளித்துள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், மக்கள் பிரதிநிதி என்ற வகையில் குறித்த தடை உத்தரவினை மதித்து நடப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன், மக்கள் மத்தியில் வீண் பதற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் நடந்து கொள்வதாகவும், இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாணக்கியன் உள்ளிட்ட 13 பேருக்கு குறித்த பகுதிக்குள் நுழைவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.