மட்டக்களப்பில் நடந்த கொடூரம்!

0

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஆளும் கட்சி அரசியல் வாதிகள் முறைகேடு செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2020.10.25ம் திகதி மேட்படி வேலைவாய்ப்புக்காக 249 நியமனக் கடிதங்களில் 199 நியமனக் கடிதங்கள் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஊடாகவும், 50 நியமனக் கடிதங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஊடாகவும் வாழங்கி வைக்கப்பட்டன.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் எனும் திட்டத்தின் ஊடாக பெயர் விபரங்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னமே பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நேர்முகத் தேர்வில் கிராமசேவையாளர் மற்றும் இராணுவத்தினர், அரச உயர் அதிகாரிகள் இணைந்து தகுதியானவர்களை தெரிவுசெய்து அனுப்பி இருந்தனர்.

அதில் தெரிவு செய்யப்பட்ட பெயர் விபரங்கள் உண்மையில் பாதிக்கப்பட்ட பின்தங்கிய குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களே அதிகமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த 25 ம் திகதி வழங்கப்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஏற்கனவே நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்ட பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டு ஆளும் கட்சி அரசியல் வாதிகளின் ஆதரவாளர்கள் பலர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எருவில் மேற்கு பகுதியில் உள்ள செல்வராசா கோபிகா எனும் மிகவும் பின்தங்கிய குடும்பப் பெண்ணின் பெயர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆளும் கட்சி இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தொண்டர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு ஓலைக் குடிசையில் வீட்டில் வாழ்ந்து வரும் மேற்படி கோபிகாவின் தந்தை செல்வராசா ஒரு கூலித்தொழிலாளி மற்றும் அவருடைய தாயார் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு மூத்த சகோதரியும் உள்ளார்கள். அவர்கள் இருவரும் பிறப்பிலேயே கால் ஊனமுற்றவர்கள். அவர்களால் நடக்க முடியாது பிறப்பிலிருந்து அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தவழ்ந்தே நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோபிகாவே தனது சகோதரியையும் சகோதரனையும் பராமரித்து வரும் நிலையில், கோபிகாவினுடைய பெயர் மேற்படி நியமன பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக இருவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை திட்டத்தில் அரசியல் தலையீடு நடந்துள்ளதா என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வில் இராணுவ மற்றும் அரச உயர் அதிகாரிகளினால் தெரிவு செய்யப்பட்ட பட்டியல் இருந்தபோது, இரண்டாவது தடவையாக இரகசிய நேர்முகத் தேர்வு ஒன்றை அரசியல்வாதிகள் நடத்தினார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி சர்வோதய மண்டபத்தில் இரண்டாவது தடவையாக இரகசியமாக நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பல வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இராஜாங்க அமைச்சருக்கு வேண்டப்பட்ட பலரின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக பலர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

இதற்கான விசாரணை குழு ஒன்றை நியமித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.