மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்திநிலையங்கள் முற்றுகை!

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் காரணமாக மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோத கசிப்பு உற்பத்திகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்பில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதனடிப்படையில் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமியின் தலைமையில் விசேட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுத்துறையினரினால் முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்கீழ் நேற்று மற்றும் இன்று அதிகாலை வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா,கழிமடு ஆகிய பகுதிகளில் ஆற்றங்கரையோரப்பகுதிகளில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

இதன்போது 100லீற்றர் கசிப்புகள் மீட்கப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பரல்கள்களில் இருந்து கோடாவும் அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் ஊரடங்கு காலத்தில் கசிப்பு விற்பனை செய்த பலர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் அவர்கள் கசிப்பு விற்பனைக்காக பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.