மட்டக்களப்பில் மக்கள் திரண்ட இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

0

உலக சனத்தொகையில் 1/3 பகுதியினர் கொவிட்-19 கொரோனா வைரஸின் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் தொற்றைக் கட்டப்படுத்துவதற்காக அரசாங்கம் உள்ளிட்ட சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபையும் பல்வேறு மக்கள் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில், நேற்று பொதுமக்கள் கூடியிருந்த, நிரந்தரச் சந்தைகள், தற்காலிகச் சந்தைகள் உள்ளிட்ட பல்பொருள் விற்பனை நிலையங்கள், பொலிஸ் வளாகம், பணப்பரிமாற்று இயந்திர வளாகங்கள் ஆகிய இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாநகர சுகாதாரப் பிரிவினர் தொற்று நீக்கும் பணிகளை முன்னெடுத்தனர் .

மேற்படித் தொற்று நீக்கும் பணிகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர் து.மதன் மற்றும் தீயணைப்புப் பிரிவின் பொறுப்பாளர் வி.பிரதீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கிருமியகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

எதிர்வரும் 20ஆம் திகதிவரை வைரஸ் தொற்றின் நோயரும்பு காலம் இரண்டாவது நிலையை அடையவுள்ளதால் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் அவதானமதாக இருக்கும்படி இலங்கை சுகாதார தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளதோடு கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த பாதுகாப்புப் படையினரை அரசு பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.