மட்டக்களப்பு-மயிலவெட்டுவான் வீரக்கட்டு ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கிரான் – கோரகல்லிமடு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய கதிரேசு கங்கேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயிலவெட்டுவான் வீரக்கட்டாற்றின் நடுவிலுள்ள மணல் திட்டியில் மணல் அகழ்ந்து வள்ளத்தில் ஏற்றிவிட்டு கரையிலுள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் உதவியுடன் கரைதிரும்பும் போது அந்த ஆற்றின் மிக ஆழமான பகுதியில் கைகள் விறைத்ததையடுத்து நீரில் மூழ்கியுள்ளார்.
அதிலிருந்து சில மணிநேரத்தில் மீட்கப்பட்டவர் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், மட்டக்களப்பு வைத்தியசாலையில் உடற்கூறு பரிசோதனை மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.