மட்டக்களப்பில் முடக்கப்பட்ட 3 கிராமசேவகர் பிரிவுகளை விடுவிக்க நடவடிக்கை!

0

மட்டக்களப்பில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட 3 கிராமசேவகர் பிரிவுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், சின்ன ஊறணி, நொச்சிமுனை ஆகிய 5 கிராமசேவகர் பிரிவுகள் கடந்த 18 ம் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் தொற்றாளர்கள் இனங்காணப்படாதமையினால் பாலமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர் ஆகிய  கிராம சேவகர் பிரிவுகளை இன்று விடுவிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நொச்சிமுனை, சின்ன ஊறணி ஆகிய  கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மாத்திரம், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குக்கும் என அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.