மட்டக்களப்பில் விவசாயிகள் அதிகளவில் பாதிப்பு

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கிற்கு மத்தியிலும் விவசாயிகள் தமது அறுவடை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் விவசாயிகள் பெரும் நஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை அதிகளவிலான விவசாயிகள் சோளம் செய்கையினை முன்னெடுத்த நிலையில் அதனை அறுவடை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் வழங்கிய மானிய உதவிகளைக்கொண்டு இம்முறை அதிகளவில் சோளம் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை சோளம் நல்ல விளைச்சலை தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிப்பு பகுதியில் அதிகளவான விவசாயிகள் சோளம் செய்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் தங்களது அறுவடையினையும் ஆரம்பித்துள்ளனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்ப்பற்று, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் சோளம் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என்னும் தாங்கள் அறுவடை செய்யும் சோளத்தினை அதிகவிலைக்கு வழங்கமுடியாத நிலையிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சிறிய வியாபாரிகள் குறைந்த விலையிலேயே தமது சோளத்தினைப்பெற்றுச்செல்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தமது உற்பத்தி பொருட்களை அரசாங்கம் கொள்வனவுசெய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும், எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சாதாரண நாட்களில் பெருமளவான வியாபாரிகள் வந்து தமது சோளத்தினை கொள்வனவுசெய்கின்றபோதிலும் வியாபாரிகளின் வரவு மிகவும் குறைவான நிலையிலேயே இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1115 ஏக்கரில் விவசாயிகளினால்சோளம் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் இ.டி.இக்பால் தெரிவித்தார்.

விவசாயிகள் அறுவடைசெய்யும் சோளம் போன்றவற்றினை மக்களின்தேவைபோக ஏனையவை உற்பத்தி நிறுவனங்கள் மூலம் கொள்வனவுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.