மட்டக்களப்பில் வீட்டைத் தாக்கிய ஆயுதக் குழு

0

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு,புதிய எல்லை வீதியில் உள்ள வீடொன்றின் மீது ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடாத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வாள் மற்றும் பொல்லுகளுடன் வந்தவர்கள் வீட்டின் கேற்றினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்தபோது வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குள் சென்று கதவினை மூடிய நிலையில், வீட்டின் முன்பாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டின் ஜன்னல்களை உடைத்து அதன் ஊடாக வாள்களை நீட்டி அச்சுறுத்தல் விடுத்ததாகவும் வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாலமீன்மடுவில் உள்ள பொலிஸ் காவலரணில் முறையிட்ட போதும் அவர்கள் தங்களால் வரமுடியாது எனவும், மட்டக்களப்பில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறு கூறியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நடைபெற்று நீண்ட நேரமாகியும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.