மட்டக்களப்பில் 2,362 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், “வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய ஆயிரத்து 11 பேரும் அத்தோடு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக சென்று வந்தவர்களுமாக ஆயிரத்து 351 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இவ்வாறு தனிமைப்படத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்களுக்கு ஏதாவது அசாதாரண உடல்நிலை காணப்பட்டால் உடனடியாக மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

அத்துடன், இன்னும் 96 படுக்கைகளைக் கொண்ட விடுதியை மூன்று வாரங்களில் தயார்ப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, “மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோய் சந்தேகநபர்களாக 36 பேர் இதுவரை அனுமதிக்கப்பட்டு அதில் தனிமைப்படுத்தலுக்காக 5 பேர் அனுப்பப்பட்டனர். ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுத்திப்படுத்தப்பட்டு கொழும்பு தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிசை அளிக்கப்பட்டுவருகின்றது.

சமூக இடைவெளியினைக் கண்டிப்பாக பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் வெளியில் செல்கின்றபோது கண்டிப்பாக அணிவதும் அவசியமானதாகும்.

கொரோனா தாக்கிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அதிகமானோர் முகக் கவசங்களையும் சமூக இடைவெளிகளை பேணியதாகவும் கைகளை நன்றாகக் கழுவுவதையும் கடைப்பிடித்தமை கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக தரவுகள் வெளியாகியுள்ளதாக வைத்தியர் K.T.சுந்தரேசன் குறிப்பிட்டார்.