மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளுக்குனாவி விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, புளுக்குணாவி விவசாயிகளின் நீர்ப் பிரச்சினை தொடர்பில் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம் எந்திரி.சீ.மோகனராஜா மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் குறித்த விடயத்தினை சாதகமாக பரிசீலனை செய்யுமுகமாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலின் பிரகாரம் நவகிரி மற்றும் புளுக்குணாவி திட்டங்களின் விவசாயிகளுடனான வெளிப்படைத் தன்மையான விசேட கூட்டமானது வெல்லாவெளி பிரதேச கலாச்சார மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர்கள், மத்திய நீர்பாசன திணைக்கள பணிப்பாளர், மாகாண நீர்ப்பாசன திணைக்கள பிரதிப் பணிப்பாளர், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் புளுக்குணாவி விவசாயிகளுக்கான நீர்ப்பாசனமானது நவகிரி திட்ட விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் சேனாநாயக்க சமுத்திரத்திலிருந்து மேலதிக நீர் பெறப்பட்டு வழங்க முடியுமென தீர்மானிக்கப்பட்டதுடன், இவ்வாறு புளுக்குணாவி திட்டத்திற்கு நீர் வழங்கப்படுவது இதுவே இறுதி சந்தர்ப்பம் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
புளுக்குணாவி விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்த மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அர்ப்பணிப்பான சேவை அனைவராலும் பாராட்டப்படுவதுடன் இவ்விடயம் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.