மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93 வீதமான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி!

0

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93வீதமான மாணவர்கள் ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

ஐந்தாம் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி 198 புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முதல் நிலை மாணவியாக குறித்த மாணவி சித்தியடைந்துள்ளார்.

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவியான சிறிசங்கர் பவினயா என்னும் மாணவியே இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இவர் பெரிய உப்போடையை சேர்ந்த சிறிசங்கர் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்  உமா ஆகியோரின் மகளாவார்.

தனக்கு தெரியாத விடயங்களை பாடசாலை வகுப்பாசிரியர், ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்துகொண்டு கற்றதாக சிறிசங்கர் பவினயா தெரிவித்தார்.

பிள்ளைகள் குறைந்த புள்ளிகளைப்பெறும்போது அவர்களை திட்டாமல் அவர்களுக்கு முடியும் என்ற நம்பிக்கையினை வளர்க்கும்போது அந்த பிள்ளை வெற்றியடையும்.

அதனையே தனது பிள்ளைக்கும் தான் ஊக்கப்படுத்தியதாக பவினயாவின் தாயாரும் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளருமான திருமதி உமா சிறிசங்கர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இம்முறை 93வீதமாக மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 433 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் கல்லூரியில் தலா 74மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோரனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடந்த வருடத்தினை விட அதிகளவான சித்திபெறப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்த கல்வி அமைச்சுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.