மட்டக்களப்பு மக்களை பொருளாதார ரீதியில் வலுவடைந்த சமூகமாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம் – பூ.பிரசாந்தன்

0

எதிர்வரும் 2023, 2024 காலப்பகுதியில் எமது தலைவர் சந்திகாந்தனின் தூரநோக்கு சிந்தனையில் மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடமாக இருக்கின்ற நிலைமை மாற்றப்பட்டு, மட்டக்களப்பு மக்கள் பொருளாதார ரீதியில் வலுவடைந்த சமூகமாக மாற்றுவதற்கான பணயத்தில் மக்களும் கைகோர்த்துப் பயணிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் ஆலயங்களுக்கான கொடுப்பனவு வழங்கும் பணிகள்  நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. இந்த  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”மக்களின் எதிர்கால வாழ்க்கையினை வலுவாக்குவதற்காக மிக அதிகமான சேவைகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது.

2023ம் ஆண்டளவில் யுத்ததால் பாதிக்கப்பட்டு வறுமையுடன் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் எதிர்காலம் சுபீட்சமாக அமைவதற்காக வலுவான பொருளாதாரக் கட்டமைப்பினை அமைத்துக் கொடுப்பதற்காக மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சமூகக் கட்டமைப்பினை உருவாக்குவதற்காக எமது தலைவர் சிவநேசதுரை சந்தரகாந்தன் அவர்கள் தொடர்ந்தும் ஆளும் அரசுடன் இணைந்து செயற்படத் தயாராக  இருக்கின்றனர்.

இருந்தாலும், இரண்டு வருடங்களாக கொரோனா அச்சம் காரணமாக நமது நாடு மாத்திரமல்ல சர்வதேசமே பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. மக்களின் அன்றாட வாழக்கை கூட பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஆளும் அரசுடன் இணைந்து முடியுமான அபிவிருத்திப் பணி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது போன்ற திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.

யுத்தத்தின் கொடுமை இன்று எம் கல்வி, கலை, கலாச்சாரம் என்பவற்றை இழந்து மீண்டும் ஒரு வலுவான எதிர்காலத்தை, பொருளாதாரக் கட்டமைபப்பினை ஏற்படுத் வேண்டிய தேவைப்பாட்டுடன் மக்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் இந்த சூழலில் அறுபது வருடங்களாக எவ்வாறு மக்களை ஏமாற்றி அரசியல் செய்தார்களோ அதே போல் மீண்டும்  நாடாளுமன்றன் சென்று ஆளும் கட்சி செய்யும் வேலைகளை விமர்சித்து வருகின்றார்கள்.

இன்று மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கின்றார்கள். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் மக்கள் அவையான்று மாகாணத்தில் அமையாமல் நிருவாகிகளால் நிருவகிக்கப்படுகின்ற சூழலை உருவாக்கியது இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், நல்லாட்சி அரசும் தான்.

கடந்த மாகாணசபை கலைக்கப்பட்ட பிற்பாடு மாகாணசபையின் பதவிக்காலத்தை ஒருவருடம் எவ்வாறு நீடிக்கலாம் என்று நரித்தந்திரத்தைக் கையாண்டார்கள் அது முடியாமல் போனது. பின்பு புதிய தேர்தல முறை என்ற அடிப்படையில் மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்காகக் கையுயர்த்தினார்கள்.

தற்போது நித்திரையில் இருந்து எழுந்தவர்கள் போன்றும் மாகாணசபைத் தேர்தலைப் பிற்போட்டதற்கும் தங்களுக்கும் எவ்வித சம்மந்தமும இல்லாது போன்றும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

அது மாத்திரமல்லாமல் இன்று கல்வியில் பல தேவைப்பாடுகள் எமது மக்களுக்கு இருக்கின்றது. ஏனெனில் நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் கல்வி மாத்திரமே. அதனை வைத்துக் கொண்டுதான் எதிர்கால சமூகத்தினை வலுவாக்க வேண்டும். தற்போது கல்வியைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்குப் பொருளாதாரம் முக்கிய தேவைப்பாடாக இருக்கின்றது.

எனவே இவை தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். எதிர்கால சமூகக் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும், எமது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான தலைவர்களை எவ்வாறு தீர்மானிக்கப் போகின்றோம் என்கின்ற அனைத்து விடயங்களிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்று பல ஊடக வீரர்கள் இருக்கின்றார்கள். எடுத்தவுடனே அவர்கள் சொல்வது இன்று பலர் மட்டக்களப்பில் மீள்குடியேற்றப்படவில்லை என்று. ஆனால் கச்சேரியின் தரவுகளை எடுத்துப் பார்த்தால் 41 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேற்றப்பட வேண்டி இருக்கின்றது.

அவற்றுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெறுமனே வாய் ஜாலங்களுடாக மக்களைக் குழப்பி எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்திப் பணிகளைக் குழப்புவதற்கான முனைப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் நல்லாட்சி அரசால் அமைக்கப்பட்ட 3000 வீடுகள் இன்று பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்றது. அந்த வீடுகளுக்காக பணம் செலவழித்து மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். ஆனால் அவ்வாறானதொரு சூழலை இந்த அரசும், அரசுடன் சேர்த்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஒருபோதும் ஏற்படுத்தாது.

அவ்வாறு முடிக்கப்படாத வீடுகள் தொடர்பிலும் எமது தலைவர் சந்திகாந்தன் அவர்கள் ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாடியிருக்கின்றார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார். எனவே மக்களிடம் கருத்துக் கேட்ககாமல் தான்தோன்றித் தனமாகச் செய்தால் இவ்வாறான நிலைமைகளே ஏற்படும்.

இன்று ஒவ்வொரு கிராமத்திற்கும் மூன்று மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது மக்களின் கருத்துக்களைக் கேட்டு மக்களினால் சொல்லப்படும் வேலைகள் தான் செய்யப்படப் போகின்றது. ஆனால் கடந்த காலத்தில் நல்லாட்சி அரசால் கொண்டு வரப்பட்ட பல கம்பெரலிய யுத்தங்கள் தோல்வியடைந்துள்ளன. மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் மேற்கொள்ளப்படும் எந்த அபிவிருத்திப் பணிகளும் நிலைக்காது என்பதற்கு கடந்த ஆட்சியின் கம்பெரலிய திட்டமே உதாரணமாகும்.

எதிர்வரும் 2023, 2024 காலப்பகுதியில் எமது தலைவர் சந்திகாந்தனின் தூரநோக்கு சிந்தனையில் மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடமாக இருக்கின்ற நிலைமை மாற்றப்பட்டு, மட்டக்களப்பு மக்கள் பொருளாதார ரீதியில் வலுவடைந்த சமூகமாக மாற்றுவதற்கான பணயத்தில் மக்களும் கைகோர்த்துப் பயணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.