கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடெங்கிலும் மாநகர சபைகள் தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு வரும் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய மட்டக்களப்பு மாநகரசபைக்கு வரும் மக்களின் நன்மை கருதி தானியங்கி தொற்று நீக்கி அமைக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த தானியங்கி தொற்று நீக்கும் கருவியை கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவினர் அமைத்துள்ளனர்.
இதன்போது மாநகரசபை முதல்வர் தானியங்கி தொற்று நீக்கி இயந்திரத்தில் தொற்று நீக்கி பணிகளை ஆரம்பித்து வைத்ததைத்தொடர்ந்து, ஏனையவர்களும் தொற்று நீக்கப்பட்டு மாநகரசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் இதன்போது உடல் வெப்ப நிலையைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் என்.தனஞ்செயன், மாநகரசபையின் சுகாதார பிரிவிற்கான தலைவர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.