மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் இன்று காலை பொருட்கொள்வனவில்!

0

கொரணா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 06.00மணி தொடக்கம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது.

பொதுமக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவுசெய்யும் வகையில் இன்று காலை முதல் நண்பகல் 12.00மணி வரையில் இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் இன்று காலை பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிந்தது.

சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல பகுதிகளில் மக்கள் தமக்கான பொருட்களை கொள்வனவுசெய்துவந்த அதேவேளை சில பகுதிகளில் அதனை மீறிய வகையில் மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச்சந்தையில் மக்கள் ஒன்றுகூடும் வகையில் தடுப்பதற்காக லேடிமனிங் வீதியில் விசேட சந்தை தொடர் அமைக்கப்பட்டு மக்கள் தமக்கான இடைவெளிகளை பேணி பொருட்கொள்வனவினை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப் கள்ளியங்காட்டில் சதோச கிளையொன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் திறந்துவைக்கப்பட்டு அதன் மக்களுக்கான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.

அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் தடையின்றி பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.