மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களை இங்குள்ள எந்த அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் கொள்ளையிடமுடியாது – சாணக்கியன்

0

சுற்றாடலை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்கமுடியாது என தெரிவித்த சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, சுற்றாடலை பாதிக்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பிற்கு நேற்று விஜயம் செய்துள்ள சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர,அவரது அமைச்சின் கீழ் செயற்படும் புவிச்சரிதவியல் அளவை சுரங்க பணியகத்திற்கும் விஜயம் செய்தார்.

அங்கு ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட அமைச்சர் பணியகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து குறித்த அலுவலகத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண் கடத்தல் உட்பட இயற்கை வளங்கள் சட்ட விரோதமான முறையில் அழிக்கப்படுவது குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மண் அகழ்வில் ஈடுபடுவோர் மாபியாக்கல் போல் செயற்படுவது குறித்தும் மண் வளம் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் அகழ்விற்கான அனுமதிகள் வழங்கப்படவேண்டும் என்பது குறித்து அமைச்சரிடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் அதிகாரங்களைக்கொண்டு அதிகாரிகளை அச்சுறுத்தி மண் அகழ்விற்கான அனுமதிகளைப்பெறுவது குறித்தும் தற்போது அதிகளவான மண் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக அது இயற்கையினை கடுமையாக பாதிக்கும் என்றவகையிலும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இயற்கை வளங்களையும் இயற்கையான மக்களுக்கு பயன்தரும் வளங்களையும் பாதுகாப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக இங்கு கருத்து தெரிவித்த சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் உள்ள மண் வளத்தினை இங்குள்ள மக்களே அதிகளவில் பயன்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
தனது பெயரையும் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் பெயரினைப்பயன்படுத்தி சிலர் மண் அனுமதிகளைக்கோருவதாகவும் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டத்திற்கு முரணான வகையில் எந்த நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிதாக எந்த மண் அனுமதிகளும் வழங்கப்படாது என தெரிவித்த அவர் முன்னர் வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் எதிர்காலத்தில் மண் அகழ்விற்கான அனுமதி வழங்கப்படும்போது மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அமைச்சர் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.

வெளி மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு மண் அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் மீளாய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கையினையும் அமைச்சரிடம் முன்வைத்திருக்கின்றோம்.

மண் அகழ்விற்கான அனுமதியை வழங்கும்போது அது தொடர்பில் ஆய்வுசெய்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள குழுவில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையும்முன்வைக்கப்பட்டதுடன் அவற்றினை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

மண் அகழ்வில் ஈடுபடுவோர் சமூக பொறுப்புடன் செயற்படும் வரையிலான அழுத்தங்களையும் திணைக்களங்கள் ஊடாக வழங்கவதற்கும் அமைச்சு நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களை இங்குள்ள எந்த அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் கொள்ளையிடமுடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக மக்கள் மத்தியில் கருத்துகள் இருக்கின்றது.

மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்றம் அனுப்புவது மக்களுக்கு சேவைசெய்வதற்காக மட்டும்தான். தங்களை ஆதரிக்கின்றவர்கள் இலாபம் ஈடுட்டுவதற்காக அதிகாரத்தினை பாவிக்கமுடியாது.

இதனை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளேன். இந்த நிலைமை தொடருமானால் அதற்கு எதிராக மக்களை அணி திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பேன் என்றார்.