மட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்!

0

உலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு வேண்டியும் கொரோனா தொற்றினால் உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் தொடர்ச்சியாக மத அனுஸ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட யாக பூசை நடத்தப்பட்டது. இதன்போது, அற்புத சக்தி படைத்த மூலிகைகள் கொண்டு தன்வந்திரி மகா யாகம் நடத்தப்பட்டது.

ஆலயத்தின் பிரதமகுரு கிரியா கலாபமணி, கிரியாஜோதி, திருமுருக கலாமணி, ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ மா.குலேந்திரரூப சர்மா தலைமையில் இந்த மகா யாகம் நடைபெற்றது.

இதன்போது, மூலிகைகள் கொண்டு யாகம் நடத்தப்பட்டதுடன் மந்திரிக்கப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

இந்த யாகத்தின்போது, கொரோனாத் தொற்றினை இல்லாமல்செய்து நாட்டினை சுபீட்சத்திற்குக் கொண்டுவர இறையாசி வேண்டப்பட்டதுடன் இன்றைய யாக பூசையின்போது ஆலய நிர்வாகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.