மட்டு. மேயரின் அதிகாரங்கள் தொடர்பான வழக்கு- ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

0

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், ஆணையாளரிடம் நீதிமன்றம் விளக்கம் கோரி உத்தரவிட்டுள்ளது.

மாநகர மேயர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு
நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அப்படியாக இந்தப் புதிய ஆணையாளர் வந்தபோது 10 அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி இன்னொரு சபைத் தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன.

அந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும்கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமடாட்டேன் என்றும் அந்த அதிகாரங்களைத் தானே பயன்படுத்துவென் என்றும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும் அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதைச் சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இவ்வாறு தடுக்கும் எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இன்றையதினம் இதனை நீதிமன்றத்திலே ஆதரித்த போது, மேயர் மனுதாரராகக் கேட்டுள்ள நிவாரணங்கள் ஏன் வழங்கப்படக்கூடாது என்று கேட்டு அறிவித்தல் அனுப்பும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவித்தல், ஆணையாளருக்கம் கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி ஆணையாளருக்கும் (இவர் இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்) அனுப்பும்படி நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வியாழக்கிழமை வழக்கினை எடுக்கும்போது அவர்கள் நீதிமன்றத்தில் காரணம் காட்டவேண்டும்” என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.