கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளை மறுதினம் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால், ஆயிரக்கணக்கான பௌத்த மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த அரசாங்கத்திலும் கிழக்கு முனையம் தொடர்பாக ஒப்பந்தம் செய்வதற்கு முயற்சிக்கப்பட்ட போதிலும் அதனை முதுகெழும்புள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்தார்.
ஆனால் தற்போதுள்ள ஒப்பந்தத்தில் நூற்றுக்கு 51 சதவீதம் இலங்கைக்கும் 49 சதவீதம் ஏனைய நிறுவனங்களுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 51 சதவீதத்திற்குள் இரு நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன.
அந்த இரு நிறுவனங்கள் ஜோன்ஸ்டனுடையதா? பி.பி.ஜய சுந்தரவினுடையதா? அல்லது நாமலுடையதா? இதனை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள். ஏன் அரசாங்கம் இது பற்றி தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த தாமதிக்கிறது? தேர்தலுக்கு முன்னர் இதனை வெளிப்படுத்துங்கள்.