மதஸ்தலங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிப்பு!

0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதஸ்தலங்களிலும் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன மற்றும் மதகலாசார அலுவல்கள் அமைச்சினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் பெளத்த மதஸ்தலங்களில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மதவழிப்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறுமாயின் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியியுடன், சுகாதார வழிகாட்டல்களுடன் அவற்றை முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்களை தமது வீடுகளுக்குள் வழிபாடுகளை முன்னெடுப்பது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 100 நபர்களுக்கு மேலதிகமாக தொழுகை நடத்தக் கூடிய பள்ளிவாசல்களில் 50 பேரை மாத்திரம் அனுமதிக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பள்ளிவாசல்களுக்குள் உள்நுழையும் போது ஆட்களை அடையாளங் காணத் தேவையான விபரங்களைப் பதிவு செய்தல், கை கழுவுதல், முகக் கவசங்களை அணிதல் மற்றும் ஒரு மீற்றர் சமூக இடைவெளி போன்ற சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

இதன்படி, இந்த விடயங்கள் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்களை மீறி செயற்படும் பள்ளிவாசல்களின் நிர்வாகப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.