மத்திய கலாசார நிதியத்தில் 11 பில்லியன் ரூபா நிதி மோசடி

0

016 முதல் 2019 வரை மத்திய கலாசார நிதியத்தில் 11 பில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நியமித்த குழுவின் அறிக்கை அம்பலப்படுத்தியதாக பிரதமர் அலுவலகம் இன்று பிற்பகல் அறிவித்தது.

மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரகாரம்,

 • உரிய அனுமதி இன்றி நிலையான வைப்புகளை மீளப் பெற்றமை மற்றும் வைப்புக்கான வட்டி வருமானம் அற்றுப்போனமையினால் 2608 மில்லியன் ரூபாவும்
 • சட்டரீதியான அனுமதியின்றி சிசு தஹம் செவன வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணங்களுக்காக 753 மில்லியன் ரூபாவும்
 • சுற்றுலா நுழைவுச்சீட்டுகளில் டொலர் வருமானம் ரூபாவிற்கு பரிமாற்றப்பட்ட போது ஏற்பட்ட நட்டம் 48 மில்லியன் ரூபாவும்
 • தொல்பொருள் பொறுப்புக்காக வழங்க வேண்டிய ஒத்துழைப்பின்மையால், சட்டவிரோதமாக வேறு செயற்பாடுகளுக்காக செலவிடப்பட்ட 2266 மில்லியன் ரூபாவும்
 • ‘அபே கம’ செயற்றிட்டத்தின் போது சொத்துக்கள் மாற்றப்பட்ட போது ஏற்பட்ட நட்டத்தால் 8 மில்லியன் ரூபாவும்
  • முறையான அனுமதியின்றி கலாசார உதவி மற்றும் பிரதானமாக வழங்கப்பட்ட 2316 மில்லியன் ரூபாவும்

  நிதியத்திற்கு இல்லாமல் போயுள்ளது.

  ஆட்சேர்ப்பு நடைமுறையில் அனுமதிக்கப்பட்ட வரையறைகளை மீறி, முறைசாரா ஆட்சேர்ப்பிற்காக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக 3060 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  அதன்படி, 1059 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குழு வெளிக்கொணர்ந்துள்ளதென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகமான நிர்வாக மோசடிகளுக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு குழு தமது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

  இதனைத் தவிர மத்திய கலாசார நிதியத்திற்கு சொந்தமாகவுள்ள டொலர் கணக்கிலும் சட்ட விரோதமாக நிதியை விடுவித்துக்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதென பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நிலையான வைப்பில் 400 மில்லியன் ரூபாவை எவ்வித அனுமதியுமின்றி விடுவித்துக்கொண்டுள்ளதாக குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி காமினி சரத் எதிரிசிங்க, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் கோட்டாபய எதிரிசிங்க, சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹணதீர ஆகியோர் குறித்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.