மத்திய தர வர்க்க குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான தகவல்! கொழும்பில் பாரிய வீட்டுத்திட்டம் ஆரம்பம்

0

மத்திய தர வர்க்க குடும்பத்தினருக்காக 5000 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் இன்று ஒருகொடவத்தை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக 3000 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கமைய இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

உரிய தரத்திற்கமைய மிகவும் கவர்ச்சிகரமாகவும் இந்த வீடுகளை நிர்மாணித்து நிறைவு செய்யுமாறு வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, வீடுகளற்ற மத்திய வர்க்க குடும்பங்களின் அவசியத்தை அறிந்து அவர்களுக்கு பொருத்தமான வகையில் இந்த வீடுகளை நிர்மாணிக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ் மத்திய வர்க்கத்தினருக்காக நிர்மாணிக்கப்படுகின்ற இந்த வீட்டு திட்டம் கொழும்பு மாவட்டத்தில் ஒருகொடவத்தை, ப்ளூமென்டல், மாலபே, மாக்கும்புர மற்றும் பொரலஸ்கமுவை பிரதேசங்களிலும், கம்பஹா மாவட்டத்தின் பேலியகொட பிரதேசத்திலும், கண்டி மாவட்டத்தின் கெட்டம்பே பிரதேசத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கு 25 வருடங்கள் அரச வங்கியினால் 6.25 வட்டி வீதத்தின் கீழ் கடன் வசதி வழங்கப்படுகின்றது.

இளம் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் மத்திய வர்க்கத்தினரை இலக்கு வைத்து இந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.