மருதமுனையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு கோரி கல்முனை நீதிமன்றத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி அலியார் றஸ்மின் அரச காணிக்கான நியாயபூர்வமான ஆதாரங்களை முன்வைத்தார்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், தனியாருக்கு உரித்தான காணி என்பதற்கான எதுவித நியாயபூர்வமான ஆவணங்களும் இல்லாத நிலையில், இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு குறித்த காணிகளை சிலர் பலவந்தமாக பிடித்துள்ளமையை கண்டித்து பாடசாலை சமூகத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.