மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை: ஊடக செய்திகளில் உண்மையில்லை

0

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என இலங்கை ஒளெடத இறக்குமதியாளர்கள் சங்கம் (SLCPI) தெரிவித்துள்ளது.

அத்துடன், தனியார் சுகாதாரத் துறை, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களில் இருப்பு தாராளமாக இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் கஸ்தூரி செல்லராஜா வில்சன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தையில் மருந்துகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் கூறினார்.

சகல மருந்து இறக்குமதியாளர்களும் குறைந்தது இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு அத்தியாவசிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறிய சந்தை வாய்ப்பைக் கொண்ட நாடு எனத் தெரிவித்துள்ள அவர், உலகெங்கிலும் உள்ள மருந்து நிறுவனங்களுடன் தமது சங்கம் சிறந்த உறவைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவை அனைத்தும் தேசிய மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதனால் அவர்கள் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட காலத்தில் வெளி மாவட்டங்களுக்கு மருந்துகளை விநியோகம் செய்வது தொடர்பான பிரச்சினை பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸாரின் உதவியுடன் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருந்துகளை களஞ்சியப்படுத்தும் போது அவை தொடர்பாக விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், மருந்துகளை சரியாக சேமிக்கத் தவறுவது அதன் வீரியத்தை பாதிக்கும் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.