மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது – இரா.சம்பந்தன்

0

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது. அமைச்சர் தொண்டமான் அவர்கள் அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் வழியில் மலையக மக்களின் விடிவிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு தலைவராவார்.

அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதிகளில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நன்மை கருதி அநேக வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒரு தலைவராகவும் மக்களின் நலனை பிரதிபலிக்கும் வகையில் செயற்பட்ட ஒரு மக்கள் தலைவராகவும் செயற்பட்டார்.

அன்னாரது மறைவானது மலையக மக்களிற்கு மாத்திரமல்லாது முழு இலங்கை வாழ் மக்களிற்கும் ஒரு பாரிய இழப்பாகும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் மறைவிற்கு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு தலைமைத்துவம் கொடுத்து மலையக மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஒரு தலைவராக கௌரவ ஆறுமுகம் தொண்டமான் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டார்கள்.

இந்த துயரமான சந்தர்ப்பதில் அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது கும்பத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மலையக மக்களின் உயர்விற்கும் விடிவிற்கும் அன்னார் முன்னெடுத்த முயற்சிகளை அயராது தொடர்ந்தும் முன்னெடுப்பதன் மூலம் அம்மக்களின் உயர்வினை உறுதி செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

அன்னாரது ஆன்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.